ஃபானி புயலின் தாக்கம் தொடர்பில் மோடி பணிப்புரை

ஃபானி புயலின் தாக்கம்: முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் பணிப்புரை

by Staff Writer 29-04-2019 | 10:08 PM
Colombo(News 1st) ஃபானி புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் தீவிரமடைந்து வரும் ஃபானி புயல், தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேச கடற்கரைகளை நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அனைவரது நலனுக்காகவும் தான் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபானி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதேவேளை, வங்கக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடந்த 25 ஆம் திகதி முதல் இந்திய வானிலை ஆய்வு நிலையத்தால் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும், பாதிக்கப்புக்குள்ளாக கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் 3 மணித்தியாலத்திற்கு ஒரு தடவை புயல் குறித்த தகவல்களை இந்திய வானிலை ஆய்வு நிலையம் வழங்கி வருவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. சென்னையிலிருந்து சுமார் 820 கிலோமீற்றர் தொலைவில் ஃபானி புயல் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும் நாளை அதிதீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தென் மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.