ரணகளமாகிய கிழக்கிற்கு நேரடியாக சென்ற நியூஸ்பெஸ்ட்

ரணகளமாகிய கிழக்கிற்கு நேரடியாக சென்ற நியூஸ் பெஸ்ட் - விசேட தொகுப்பு

by Fazlullah Mubarak 28-04-2019 | 9:30 PM

நாடளாவிய ரீதியில் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் இன்று மாலை 5 மணி தொடக்கம் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அந்தப் பகுதிகளிற்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர். 3 தேவாலயங்கள், 3 முக்கிய நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரமாகும் நிலையில், தாக்குதல்தாரிகளின் அடுத்தகட்ட திட்டமிடல்களை நிறுத்துவதற்கு முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த இரண்டு வாரங்களில் வெடிபொருள் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டமை முக்கியமானதாகும். சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறை - சாய்ந்தமருது பகுதியை நோக்கி நியூஸ்பெஸ்ட் குழுவினர் பயணித்தனர். பயங்கரவாதிகள் தங்கியிருந்து குண்டை வெடிக்கச்செய்த வீடு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலைமை தொடர்பான தகவல்களையும் பெற முடிந்தது. இதேவேளை, இங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள் அணியும் வௌ்ளை நிற ஆடைகள் தொடர்பில் பொலிஸார் அதிக கவனம் செலுத்தினர். கிரிஉல்ல பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 9 வௌ்ளைநிற ஆடைகளில் 5 ஆடைகள் இங்கு காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, சாய்ந்தமருது பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வீட்டிலிருந்து காப்பாற்றப்பட்ட இருவரும் மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் பிள்ளை என்பது தெரியவந்துள்ளது.