கல்முனையில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

கல்முனையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

by Staff Writer 28-04-2019 | 10:33 AM
Colombo (News 1st) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (28ஆம் திகதி) காலை 10.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பின் நிமித்தம் இன்று மாலை 5 மணியளவில் குறித்த பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இன்றும் அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, பயங்கரவாதத் தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமின் சாரதியாக செயற்பட்ட கபூர் என் அழைக்கப்படும் நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விசாரணைகளின் மூலம் மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் முகாமில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை அடையாளம் காண்பதற்கு முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உரித்தான துப்பாக்கியொன்று நிந்தவூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, வண்ணாத்திவில்லு பகுதியில் குறித்த பயங்கரவாதிகளுக்கு சொந்தமான வீடொன்றின் பின்புறத்திலுள்ள காணியில், புதைக்கப்பட்ட பீப்பாய் ஒன்றிலிருந்து மற்றுமொரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். டி - 56 ரக துப்பாக்கி ஒன்றும் 6 மைக்ரோ ரக பிஸ்டல்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.