வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

கலிபோர்னிய வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்

by Chandrasekaram Chandravadani 28-04-2019 | 7:30 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சன்டியாகோ (San Diego) நகருக்கு வடக்காக அமைந்துள்ள போவே (Poway) நகரிலுள்ள வழிபாட்டுத்தலத்திலேயே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னர் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த வழிபாட்டுத்தலத்தில் பாஸ்கா விழா (Passover) நடைபெற்றுக்கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தத் தாக்குதலானது வெறுக்கத்தக்க ஒரு செயல் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தாக்குதலாகப் பதிவாகிய 11 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று 6 மாத காலத்தின் பின்னர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.