இரண்டு முக்கிய சந்தேகநபகர்கள் நாவலபிட்டியில் கைது

இரண்டு முக்கிய சந்தேகநபகர்கள் நாவலபிட்டியில் கைது

by Fazlullah Mubarak 28-04-2019 | 9:30 PM

பயங்கரவாத பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய சந்தேகநபகர்கள் இன்று அதிகாலை நாவலபிட்டியில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும், மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்படும் ஐவரின் பெயர் மற்றும் நிழற்படங்களை கடந்த 25ஆம் திகதி பொலிஸார் வௌியிட்டனர். மக்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் இந்த விபரங்கள் வௌியிடப்பட்டன. அதில் காணப்படும் மொஹமட் இவ்ஹைம் ஷாஹிட் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் இவ்ஹைம் சாதிக் அப்துல் ஹக் ஆகிய இருவரும் நாவலபிட்டியில் வில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் அநுராதபுரத்திலிருந்து நாவலபிட்டிக்கு வேனில் பயணித்ததாக பொலிஸ் அத்தியட்சகர் சூலனீ வீரரத்னவிற்குக் கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கமைய, நாவலபிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுஜீவ டி சில்வா உள்ளிட்ட குழுவினர் விரைந்து செயற்பட்டனர். அவர்கள் பயணித்த வேனை செலுத்திச்சென்றதாகக் கருதப்படும் 23 வயதான சாரதி, நாவலபிட்டி கொரகஓய பகுதியில் முதலில் கைது செய்யப்பட்டார். முக்கிய இரு சந்தேகநபர்களும் அநுராதபுரத்திலிருந்து வருகை தந்து கம்பளையிலுள்ள அவர்களின் மாமாவின் வீட்டிற்குச் சென்றமை விசாரணைகளில் தெரியவந்தது. அவர்கள் பயணித்த வேன் நாவலபிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபர்களின் மாமாவிற்குச் சொந்தமானது என கூறப்படும் வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்தனர். சந்தேகநபர்களின் மாமாவை கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தபோது, ஷாஹீட் அப்துல் ஹக் மற்றும் சாதிக் அப்துல் ஹக் ஆகிய இரு முக்கிய சந்தேகநபர்களும் அவருக்குச் சொந்தமான பாதணிக்கடையில் ஔிந்திருந்தமை தெரியவந்தது. இதன் பின்னர் இரண்டுமாடி பாதணிக்கடையை சுற்றிவளைத்து உள்நுழைந்த பாதுகாப்புத் தரப்பினர் இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். சகோதரர்களான அவர்கள் இருவரும் 30 மற்றும் 27 வயதுகளை உடையவர்களாவர். மேல்மாடியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டுகள் கொண்டுசெல்லப்படும் பொதியொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, 27 வயதான சாதிக் அப்துல்ஹக் சிரியாவில் யுத்தப் பயிற்சிகளைப் பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்தக் குழுவினருக்கு பயங்கரவாத பயிற்சியளிகப்பட்டதாகக் கருதப்படும் நிலையம், சந்தேகநபர்களின் மாமாவின் வீட்டில் நடத்திச் செல்லப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முக்கிய சந்தேகநபர்களுக்குச் சொந்தமான மாவனெல்ல தெல்கஹகொட பகுதியிலுள்ள வீட்டை பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து சோதனையிட்டனர். இரண்டு சந்தேகநபர்களின் தாய், சகோதரிகள் இருவர் மற்றும் இரு சகோதரர்கள் ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். வீட்டில் காணப்பட்ட 4,95,000 ரூபா பணமும் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.