தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 106 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 27-04-2019 | 7:28 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று (21) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 106 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இன்று காலை 6.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்திய குழுவுடன் தொடர்புகளைப் பேணிய நபரொருவர் தும்மலசூரிய, அத்துல்கஹகொட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் சனாஸ்தீன் எனப்படும் 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேகநபர் இன்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ஹட்டன் - மஸ்கெலியாவிலுள்ள பள்ளிவாசல் ஒன்று இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நான்கு வாள்கள், மூன்று கோடரிகள், கத்தி உள்ளிட்ட 50 கூரிய ஆயுதங்களை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர். பள்ளிவாசலின் மௌலவியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நூர்தீன் மொஹமட் தாஜூடீனும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொம்பனித்தெருவிலுள்ள பள்ளிவாசல் ஒழுங்கையிலுள்ள பள்ளிவாசலில் நேற்று 46 வாள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட மௌலவியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்களுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் மற்றும் வீசா இன்றி தங்கிருந்த பங்களாதேஷ் பிரஜையொருவரும் நேற்று மாலை பொலன்னறுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலன்னறுவை - கல்லேல்ல பகுதியைச் சேர்ந்த அப்துல் அஹமட் அஸ்வர், கத்துருவெல முஸ்லிம் காலனியை சேர்ந்த மொஹைதீன் ரைபான் எனப்படும் ஜலீல் மொஹமட் ரிம்சான் ஆகியோரே கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களாவர். கைது செய்யப்பட்டுள்ள சைபுள் இஸ்லாம் எனும் பங்களாதேஷ் பிரஜை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் விசா இன்றி தங்கியிருந்துள்ளமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளது.