சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் விசேட சோதனை; 1350 பேர் வௌியேற்றம் 

by Staff Writer 27-04-2019 | 9:02 PM
Colombo (News 1st) நேற்றிரவு வெடிச்சம்பவம் மற்றும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் இன்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று காலை முதல், சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். கிராம மக்கள் அனைவரும், எம்.எம்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு அனுப்பப்பட்டதன் பின்னர் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு கட்டளைத்தளபதியின் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது பகுதியில் நேற்றிரவு 6 மணியளவில் இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தனர். உரிமையாளர் அற்ற, கைவிடப்பட்ட வேனொன்று இதன்போது கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான சில பொருட்களையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டனர். இதனையடுத்து, கல்முனை சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்திற்குள் பாதுகாப்புத் தரப்பினர் பிரவேசித்தனர். வெடிச்சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் வீட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டிற்குள் காயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணொருவர் மற்றும் ஒரு சிறுவனை பாதுகாப்புத் தரப்பினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, கட்டளையை மீறிப் பயணித்த முச்சக்கர வண்டி மீது பாதுகாப்புத் தரப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், அவரின் கணவர், உறவினர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர். வெடிச்சம்பவம் மற்றும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பகுதியில் நீதவான் விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வீட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரில் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தாக்குதல் நடத்திய குழுவுடன் தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு கிராம மக்களே தகவல்களை வழங்கியுள்ளனர். இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாய்ந்தமருது - வொலிவோரியன் - சுனாமி குடியேற்றக் கிராம மக்கள் தொடர்ந்தும் காரியப்பர் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். அவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். 460 குடும்பங்களைச் சேர்ந்த 1350 பேர் காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். நேற்றிரவிலிருந்து மக்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காரியப்பர் வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் சமைத்த உணவு வழங்கப்பட்டது.