பொலிஸ் உயரதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

12 பொலிஸ் உயரதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

by Staff Writer 26-04-2019 | 3:58 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இருவர் உள்ளிட்ட 12 பொலிஸ் உயரதிகாரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தது. அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள், நாட்டில் இடம்பெற்ற மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற நிலை, தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டது. இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வர், இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 4 பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்குகின்றனர். இதன் பிரகாரம் வடமேல் மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே. அபேசிறிகுணவர்தன, மேல் மாகாண பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காலாற்படை மற்றும் போக்குவரத்து பிரிவு, மேல் மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டது. புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பாகக் கடமையாற்றிய வி.பி.சி.ஏ. சிறிவர்தன, மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஏ.எஸ். பண்டார, சீதாவக்க பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய பிராந்தியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.யூ.பி. ஜயசிங்க, எல்பிட்டிய பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்