விசாரணைகள் நிறைவடையும் வரை குற்றவாளிகள் என எவரையும் சுட்டிக்காட்ட வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்

by Bella Dalima 26-04-2019 | 9:12 PM
Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாத் சாலிக்கோ முஜிபுர் ரஹ்மானுக்கோ தமக்கோ தொடர்பு இல்லை என ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். மேலும், இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தாம் வேதனையடைவதாகவும் வெட்கித்துள்ளதாகவும் கூறினார். சிலர் விருது வழங்கும் நிழற்படங்களைக் காண்பித்து குற்றம் சுமத்துவதாக சுட்டிக்காட்டிய ரிஷாட் பதியுதீன், விருது வழங்கும் அமைச்சர்கள் அனைவரும் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்கள் என கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை தானும் தனது சகோதரர்களும் சமூகத்தினரும் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தனது இணைப்புச் செயலாளராக இப்ராஹிம் எப்போதும் செயற்பட்டதில்லை எனவும் அடையாள அட்டை எதனையும் அவருக்கு வழங்கவில்லை எனவும் அவர் மேலும் கூறினார். விசாரணைகள் நிறைவடையும் வரை குற்றவாளிகள் என எவரையும் சுட்டிக்காட்ட வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் தாம் கோருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.