வாரணாசியில் களமிறங்காத பிரியங்கா காந்தி

வாரணாசியில் களமிறங்காத பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கல் செய்தார் நரேந்திர மோடி

by Bella Dalima 26-04-2019 | 5:39 PM
மக்களவைத் தேர்தலுக்காக உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில், பிரதமருடன் கூட்டணித் தலைவர்களான நிதிஷ்குமார், ராம்லாஸ் பாஸ்வான் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் வருகை தந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கட்சியின் அஜய்ராய் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி இந்த தொகுதியில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக கூறப்பட்ட நிலையில், தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸின் வெற்றிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்த தொகுதியை பொருத்தவரையில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கடந்த தேர்தலில் பிரதமர் மோடி 5 இலட்சம் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு வலுவான போட்டியாளர்கள் அறிவிக்கப்படவில்லை என பொதுவான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.