முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாகப் பாராது பாதுகாக்க வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 26-04-2019 | 3:48 PM
Colombo (News 1st) முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகளாகப் பாராது அவர்களை பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் பயங்கரவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று முற்பகல் சந்தித்த ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக தாம் முன்னின்றதன் காரணமாகவே அண்மைக்காலமாக தமக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இதேவேளை, வௌிநாட்டிலிருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சில பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பொருட்படுத்தவில்லை என அவர் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் குறித்து கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மா அதிபர் இன்று தமது பதவியிலிருந்து விலகுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா செய்ததை அடுத்து, இன்றைய தினம் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்படுவார் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, புலனாய்வுத் தகவல்களை தமக்கும் ஏனையோருக்கும் வழங்காமை தொடர்பில் வினவியமைக்கு, பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ் மா அதிபரும் மௌனம் காத்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.