பொலிஸ் மா அதிபரிடம் 2 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 26-04-2019 | 6:58 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று ஆஜரானார். விசாரணைக் குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆஜரானார். உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த மூவரடங்கிய விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். பொலிஸ் மா அதிபர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் மூவரடங்கிய விசாரணைக்குழு அமைந்துள்ள வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. நாட்டின் சில பகுதிகளில் கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த மூவரடங்கிய குழுவினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.