தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சஹ்ரானும் உயிரிழந்தாரா?

by Bella Dalima 26-04-2019 | 8:20 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹஷிம் கருதப்படுகின்றார். தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சஹ்ரானும் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பலரினதும் கவனம் திரும்பியுள்ளது. சஹ்ரான் ஹஷீம் உள்ளிட்டோர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் கையொப்பத்துடன், பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இம்மாதம் 9 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சஹ்ரான் என்பவர் இந்தத் தாக்குதலுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ஷங்ரில்லா ஹோட்டலுக்கு சென்ற பயங்கரவாதிகள் இருவரில் சஹ்ரானும் ஒருவர் என பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர். IS பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் காணொளியில் சஹ்ரானை ஒத்த ஒருவரும் உள்ளமையைக் காண முடிகின்றது. எனினும், மரபணு பரிசோதனைகள் நிறைவடையும் வரை அதனை உறுதிப்படுத்த முடியாது என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,
இந்தத் தாக்குதலில் சஹ்ரானும் உயிரிழந்துள்ளதாக வதந்தி பரப்பப்படுகின்றது. சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 100 வீதம் அந்தப் புகைப்படத்தை நாம் ஏற்கப்போவதில்லை. சஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடியில் 2017ஆம் ஆண்டு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். அந்த சந்தர்ப்பத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சஹ்ரானின் புகைப்படமே இன்று முகப்புத்தகத்தில் பகிரப்படுகின்றது
என இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் குறிப்பிட்டார். சஹ்ரான் தலைமை தாங்கிய குழுவிற்கு நௌபர் மௌலவி தற்போது தலைமைத்துவம் வழங்குவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், அவர் தொடர்பில் இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு நேற்று கருத்துத் தெரிவித்தது.
சஹ்ரானின் முக்கிய ஒத்துழைப்பாளராக நெளபர் மௌலவி உள்ளார் என்பதை நாம் வெளிப்படுத்துகின்றோம். இந்த நபரே இரண்டாவது தாக்குதலுக்கு தயாராவதாக வெளிநாட்டு முகவர் அமைப்பின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையாக இருக்க முடியும். நௌபர் மெளலவி என்பவர், தன்னுடைய முகப்புத்தகத்தில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்ட நபர். 2018 ஆகஸ்ட் மாதம் வரை ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக அவர் பல கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். அவர் தொடர்பில் எமது விசாரணைப்பிரிவினர் கடுமையாக ஆராய வேண்டும். அத்துடன், சஹ்ரானின் தம்பியும் ஐ.எஸ் அமைப்புடன் செயற்பட்டவராவார். இந்த மூன்று நபர்களும் மிகவும் அபாயகரமானவர்கள்
என இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கூறினார். இதேவேளை, தெமட்டகொடயில் வீடொன்றில் கைது செய்யப்பட்ட மொஹமட் யூசுப் இப்ராஹிம், தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். அவரின் மகன்மார் இருவர் தற்கொலைதாரிகளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இப்ராஹிம் குடும்பத்திற்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை, பாதுகாப்புப் பிரிவினரால் அண்மையில் சுற்றிவளைக்கப்பட்டதுடன், அங்கிருந்த சிலர் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.