இன்றும் பல இடங்களில் சுற்றிவளைப்பு

இன்றும் பல இடங்களில் சுற்றிவளைப்பு; கொம்பனித்தெருவில் கூரிய ஆயுதங்கள் மீட்பு

by Staff Writer 26-04-2019 | 9:50 PM
Colombo (News 1st) இன்றும் நாட்டில் சந்தேகத்திற்கிடமான பல இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒழுங்கையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்று முற்பகல் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அங்குள்ள பிரதம மௌலவியின் அறையிலிருந்து 46 வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகத்திற்கிடமான மௌலவி கைது செய்யப்பட்டதுடன், அவர் வசமிருந்த கூரிய ஆயுதம் மற்றும் 25 இராணுவ சீருடைகளை பொலிஸார் கைப்பற்றினர். இன்று பிற்பகல் கிடைத்த தகவலுக்கு அமைய, கொள்ளுப்பிட்டியில் மற்றுமொரு பள்ளிவாசலை பொலிஸார் சோதனையிட்டனர். அங்கிருந்து இராணுவ சீருடைக்கு ஒப்பான 28 உடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் உட்பட மேலும் ஒரு தொகை உபகரணங்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் உள்ளடங்குகின்றன. சம்பவம் தொடர்பாக அங்கு தங்கியிருந்த நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, தம்முடன் பள்ளிவாசலில் தங்கியிருக்கும் 22 வயதுடைய நண்பர் அந்த உடைகளைக் கொண்டுவந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். கல்நேவ, அவுகன பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளை மறைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுகன பொலிஸ் காவலரணின் பின்புறமாக வயலில் துப்பாக்கிகள் இரண்டையும் மறைத்து வைக்க முயற்சிக்கும் போது நேற்றிரவு அவர்கள் இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் கூறினர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 42 தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 42 மற்றும் 48 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் கல்கிரியாகம பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர். பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 6 சந்தேகநபர்கள் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் இராணுவம் மேற்கொண்ட தேடுதலின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம், காத்தான்குடி, நொச்சியாகம, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர். ஒருகொடவத்தை மேம்பாலத்தை அண்மித்து பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிளை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் இன்று முற்பகல் சோதனையிட்டனர். குறித்த மோட்டார்சைக்கிள் எவரேனும் ஒருவரால் திருடிக் கொண்டுவரப்பட்டு இவ்வாறு கைவிடப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் கூறினர். மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் மூன்று நாட்களுக்கு முன்னர் நவகமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மோட்டார்சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை. அம்பலன்தொட - கொக்கல மகா வித்தியாலயத்தை அண்மித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பலன்தொட டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியில் போலி குண்டை வைத்துச் சென்ற சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பஸ் வண்டியின் பின்புற ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்த பொதியை வெளியில் கொண்டுவந்து சோதித்த போது, இலத்திரனியல் உபகரணம், மோட்டார்சைக்கிளுக்கான மின்கலம் ஆகியவற்றை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு கண்டுபிடித்தது. அம்பலன்தொட - போலான பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் இராணுவத்திலிருந்து விலகிய ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் பொலிஸாரும் இராணுவமும் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்த ஒரு தொகை போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.