by Bella Dalima 26-04-2019 | 3:19 PM
Colombo (News 1st) இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்கள் அபாயகரமானவை என அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.
அந்த மூன்று நாட்களில் இலங்கையில் சமயத்தளங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க தூதரகம் ட்விட்டர் தகவல் ஊடாக எச்சரித்துள்ளது.
நாளை (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சன நெரிசல் மிக்க இடங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க பிரஜைகளை தூதுவராலயம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த மூன்று நாட்களில் இவ்வாறான பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாக இலங்கை அதிகாரிகள் எவரும் நாட்டு மக்களை எச்சரிக்கவில்லை.
இதற்கமைய, இந்த அறிவுறுத்தல் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகியோரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
எனினும், அவ்வாறானதொரு பாதுகாப்பற்ற நிலைமையிருப்பதாக எந்தவொரு அறிவிப்பையும் தாம் விடுக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.