பள்ளத்தை நோக்கி நீரோட்டத்தை திருப்ப முனைவது அநீதி

பள்ளத்தை நோக்கி நீரோட்டத்தை திருப்ப முனைகின்றமை அநீதியானது - சரத் பொன்சேகா

by Staff Writer 25-04-2019 | 8:37 AM
Colombo (News 1st) நாட்டை எவ்வாறு மீட்டெடுப்பது, நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பில் யதார்த்தத்தை எதிர்கொண்டு பேசவேண்டிய தருணம் இது எனவும் இது சாதாரணமாக நினைக்கக்கூடிய ஒரு விடயமல்ல எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் பேசியபோது சரத் பொன்சேகா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். நாம் இணைந்து, வலிமைப்பட்டு, இந்த சபையிலுள்ள அனைவரின் ஒத்துழைப்புடன் அபாயகரமான இந்த நிலைமையிலிருந்து மீள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பாதுகாப்பது என்பது பயங்கரவாதம் ஏற்படும் வரை காத்திருப்பது அல்ல என்பதை, அரசியல்வாதிகளும் இராணுவ தலைமை அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்த சரத் பொன்சேகா, யுத்தம் நிலவினாலோ இல்லாவிட்டாலோ அல்லது பயங்கரவாதம் காணப்பட்டாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பொறுப்பு காணப்பட வேண்டும் எனவும் அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவிற்கு தாக்குதல் தொடர்பில் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்டதாக, 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டதா என்பது தேவையற்ற விடயம் எனக் கூறிய பொன்சேகா, அறிவித்த அடுத்தநாளிலிருந்து அமுல்படுத்தவேண்டியிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வுத் தலைமை அதிகாரி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கீழே செயற்படுகின்றார் எனத் தெரிவித்த அவர், பாதுகாப்புப் சேவை வாரத்திற்கு ஒரு தடவை கூடியிருந்தால் நிச்சயமாக இந்தக் கடிதம் தொடர்பில் பேசியிருக்க முடியும் எனவும் இவ்வாறான கடிதமொன்று கிடைத்தால் பாதுகாப்புப் பேரவையை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பள்ளத்தை நோக்கி நீரோட்டத்தை திருப்ப முனைகின்றமை அநீதியானது எனவும் குறித்த கடிதத்தை கருத்தில்கொள்ளாமை பாரிய பிரச்சினையாகும். அது நாட்டின் பாதுகாப்பு மீதான பாரிய தாக்குதலாகும் என அவர் மேலும் கூறியுள்ளார். குறைந்தபட்சம் 7,8 வருட செயற்பாடாக இருக்கும் இந்தப் பயங்கரவாத விடயம் தொடர்பில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் ஓரளவிற்கேனும் பொறுப்புள்ளதாக, சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேநேரம், பாதுகாப்புப் பேரவையினர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கடமையிலிருந்து தவறியுள்ளனர் என்றோ அல்லது தோல்வியடைந்துள்ளனர் என்றோ எதைக் கூறிளாலும் மக்களோ நாமோ அதனை ஏற்கப்போவதில்லை. ஆகையால் தவறை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, தொடர்ந்து பேசிய பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாதுகாப்புப் பேரவைக்கு கடந்த 6 மாத காலமாக பிரதமர் மற்றும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்றால், ஏன் பிரதமர் அது தொடர்பில் எவரிடமும் கூறவில்லை எனக் கேள்வியெழுப்பினார். இவ்வாறான பாரியதொரு தவறு இடம்பெறும் வரை அதுகுறித்த நடவடிக்கைகளை எடுக்காதிருந்தமைக்காக நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், இவ் அரசாங்கம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமாயின், பொருத்தமான இடங்களிற்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டுசெல்ல முடியாது போகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் இடம்பெற்று சுமார் 48 மணி நேரத்திற்கு பின்னர் பீல்ட் மார்ஷல் ஆகிய தனக்கு பிரதமரை சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சரத் ​பொன்சேகா, அரசாங்கத்தில் தன்னைவிட பாதுகாப்பு தொடர்பில் அறிந்தவர் எவருமிருந்தால் தனது பீல்ட் மார்ஷல் பதவியை அவர்களுக்கு வழங்குவதகக் கூறியுள்ளார். எனவே, தம்மைப் போன்றவர்களிடமிருந்து பயன்பெறுமாறு கூறிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாது, எம்மைச்சார்ந்தவர்களை நியமித்துக் கொண்டு, குண்டு துளைக்காத வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, சைரன் பொருத்தப்பட்ட வாகனங்களில் பயணிப்பதே அவசியமானது எனின், நாடு இவ்வாறே செல்வதற்கு இடமளிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.