தாக்குதலுக்கு முன்தினம் சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் அறிவித்ததாக தகவல்

by Staff Writer 25-04-2019 | 8:37 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறன்று நிச்சயமாக தாக்குதலொன்று மேற்கொள்ளப்படும் என அதற்கு முன்னைய தினம் இரவு சர்வதேச புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த விடயம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுகளின் ஊடாக அறிவுறுத்தப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 11 ஆம் திகதி சர்வதேச உளவு சேவை இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதுடன், அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன் தினம் இரவு 7 மணிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியமையினால் தெஹிவளை பிரதேசத்திலுள்ள தேவாலயங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலை தடுக்க முடிந்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னைய நாள் இரவிலேயே பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் தெஹிவளையிலுள்ள மூன்று தேவாலயங்களுக்குச் சென்ற குண்டுதாரியினால் தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதேவேளை, மொஹமட் யூசுப் இப்ராஹிம் என்பவர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக CNN இன்று செய்தி வௌியிட்டுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரின் தந்தையே மொஹமட் யூசுப் இப்ராஹிம் ஆவார். ஷங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இல்ஹாம் மற்றும் இன்ஷாவ் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இல்ஹாம் அஹமட் இப்ராஹிம் ஏற்கனவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் என அரசாங்கத்தின் முன்னாள் செய்தி பணிப்பாளர் சுதர்ஷன குணவர்தனவை மேற்கோள்காட்டி CNN செய்தி வௌியிட்டுள்ளது. சின்னமன் மற்றும் ஷங்ரிலா ஹோட்டல்களில் இவர்கள் இருவரும் தனித்தனியாக சென்று தாக்குதல்களை நடத்தியுள்ளதாக லண்டன் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் இவர்களின் தந்தையான யூசுப் இப்ராஹிம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாசனைத் திரவியங்கள் துறையில் பிரபல வர்த்தகரான இவர், மேலும் சில தொழிற்துறைகளின் உரிமையாளர் என்பதும் தெரியவந்துள்ளது. இப்ராஹிம் 9 பிள்ளைகளின் தந்தை என்பதுடன், அவர்களில் 6 பேர் ஆண் பிள்ளைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரின் ஒரு புதல்வரான இன்ஷாப் அஹமதிற்குச் சொந்தமான வெல்லம்பிட்டியிலுள்ள செப்பு தொழிற்சாலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இலங்கையின் பிரபல தங்காபரண வர்த்தகர் ஒருவரின் மகளே இன்ஷாபின் மனைவி எனவும் தகவல் பதிவாகியுள்ளது. தாக்குதல்களின் பின்னர் தெமட்டகொடயிலுள்ள அவர்களின் வீட்டிற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த BMW ரக கார், குடும்பத்தின் இளைய மகளின் கணவருக்கு சொந்தமானது என குறிப்பிடப்படுகின்றது. அந்த காரில் இருந்தே சின்னமன் கிரான்ட் ஹோட்டலின் சின்னம் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தலொன்று கண்டெடுக்கப்பட்டது. இல்ஹாமின் மனைவி, தெமட்டகொட வீட்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குண்டொன்றை வெடிக்கச்செய்து உயிரிழந்ததுடன், அவர் உயிரிழக்கும் போது கர்ப்பமாக இருந்ததாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.