Update: கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி மீள திறக்கப்பட்டது

by Staff Writer 25-04-2019 | 10:53 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்பாக உள்ள வீதி இன்று (25ஆம் திகதி) தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலைய வௌிப்புற வாகனத் தரப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரொன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதால் குறித்த வீதி மூடப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனால் சில மணித்தியாலங்கள், விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக, வௌிநாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகளுக்கும் தாமதம் ஏற்பட்டதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியிருந்தார். விமானப் படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் கிடைக்காதமையால் விமான நிலையம், பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன. பதுளை பொது வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஆகியன சோதனைக்கு உபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குருநாகல் பஸ் நிலையத்திலிருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, மட்டக்களப்பு நகரிலுள்ள கொமர்ஷல் வங்கி வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தமையை அடுத்து, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பின் நிமித்தம் பலாங்கொட நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதோடு, நீதிமன்ற கட்டட வளாகத்தில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கொழும்பு - கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன அமைந்துள்ள பகுதிகளிலுள்ள வீதிகளில் பாரவூர்திகள் பயணிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பு றிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையில் தற்போது சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிடைத்த தகவலுக்கமைய சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அஜித் தத்தநாராயண தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, சிகிச்சை பெற வரும் நோயார்களுக்கும் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாடளாவிய ரீதியில் பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக அநாவசியமான அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள அவசியமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் வீதி தடை ஏற்படுத்தப்பட்டு வாகனங்களும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சளார், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கும் தகவலின்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.