வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலை சுற்றிவளைப்பு: குண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

by Staff Writer 24-04-2019 | 10:02 PM
Colombo (News 1st) இன்சாஃப் அஹமட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டியவிலுள்ள செப்பு தொழிற்சாலையை பொலிஸார் இன்று சுற்றிவளைத்தனர். குறித்த தொழிற்சாலையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தொழிற்சாலையின் முகாமையாளர், தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 9 பேர் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இன்சாஃப் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியாவிற்கு புறப்பட்டுச் செல்வதாக தனது மனைவிக்கு கூறியுள்ளதுடன், அன்று விமான நிலையத்தில் மனைவியை திடமாக இருக்குமாறு கூறியதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. தாக்குதலுக்கு சுமார் ஒரு மணித்தியாலம் முன்னதாக தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர் நலன் விசாரித்ததாக இன்சாஃபின் மனைவியின் சகோதரனை மேற்கோள்காட்டி பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்துவதற்கு இருவர் வந்திருந்தனர். தாக்குதலுக்காக வருகை தந்த பயங்கரவாதிகள் குழு என தெரிவிக்கப்பட்டு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காட்சிகளில் காணப்படும் நபர் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரும் அதில் காணப்படுகின்றனர். இந்த பயங்கரவாதிகள் குழு கொழும்பிலுள்ள மற்றுமொரு நட்சத்திர ​ஹோட்டலையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளமை ஏற்கனவே தெரியவந்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குறித்த ஹோட்டலின் பிரதான உணவகத்திற்குள் குண்டை வெடிக்கச்செய்வதற்கு பல முறை முயற்சித்த போதிலும் அது கைகூடாததால், பின்னர் தெஹிவளை விடுதியொன்றுக்குள் அது வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழுவினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். கொழும்பு மாநகரின் மூன்று பிரபல ஹோட்டல் தொகுதிகள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மூன்று தற்கொலை குண்டுதாரிகளுக்கும் குறித்த ஹோட்டல்களில் ஒரே நபர் அறைகளை ஒதுக்கிக்கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் 32 வயதான மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பில் தொடந்தும் விசாரணை நடத்தப்படுகின்றது.