போலி ஆவணத் தயாரிப்பு வழக்கு: திஸ்ஸ விடுவிப்பு

போலி ஆவணத் தயாரிப்பு தொடர்பான வழக்கிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விடுவிப்பு

by Staff Writer 24-04-2019 | 3:31 PM
Colombo (News 1st) போலி ஆவணத் தயாரிப்பு தொடர்பிலான வழக்கில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த ஆவணத்தை அம்பலப்படுத்தியதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்விதத்திலும் பாதிப்பு எற்படுத்தியிருந்தால், அது தொடர்பில் கவலை தெரிவிப்பதுடன் மன்னிப்புக் கோருவதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவ்வாறான ஆவணங்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்து செயலாற்றுவதைத் தவிர்ப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பிடம் மன்னிப்புக் கோருவதுடன், வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு சட்டமா அதிபர் எதிர்பார்க்கவில்லை என சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் தெரிவித்தார். அரசியல் வாதிகள் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை வௌியிட வேண்டுமெனவும், அல்லாவிடின் நாட்டை பிளவுபடுத்தக்கூடிய சிக்கல் நிலை தோன்றக்கூடும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் தெரிவித்தார். இதற்கிணங்க திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுகளில் இருந்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை இன்று விடுவித்தது. மேலும், திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையும் நீக்கப்பட்டு, அவருடை கடவுச்சீட்டையும் அவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.