தொடர் குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு - ஐ.நா.

by Staff Writer 24-04-2019 | 7:29 AM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த 320க்கும் அதிகமானவர்களில் சிறுவர்கள் 45 பேர் அடங்குவதாக ஐ.நா. சபை நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு - கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 27 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 18 மாதங்களேயான குழந்தையொன்றும் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் வௌிநாடுகளைச் சேர்ந்த 5 சிறுவர்களும் அடங்குகின்றனர். காயமடைந்த 20க்கும் அதிகமான குழந்தைகள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதுடன் அவர்களில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள், குடும்பங்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை மிகவும் மோசமான செயல் எனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரினதும் குடும்ப உறவுகளுக்கு தமது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சிறுவர்கள் தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளதுடன் மேலும் பல சிறுவர்கள் இந்த மிலேச்சத்தனமான சம்பங்களை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் யுனிசெப்பின் அறிக்கை மூலம் வௌிக்கொணரப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சில வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கான மருந்துப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிறுவர்களை இனம்கண்டு அவர்களை அவர்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்கும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.