குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 60 பேர் கைது

by Staff Writer 24-04-2019 | 7:15 PM
Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளதுடன், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பில் மேலும் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது மாதம்பை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் இருந்த எகிப்து பிரஜை இன்று பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடம் விசாவோ கடவுச்சீட்டோ இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவல்களுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளுக்கு குறித்த சந்தேகநபர் பயிற்சிகளை வழங்கியுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் முகம், கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் முகத்தை ஒத்ததாகக் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எகிப்து நாட்டை சேர்ந்த 44 வயதான குறித்த சந்தேகநபர் நாளை (25) சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, கொழும்பு நட்சத்திர ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய இன்சாவ் அஹமட் என்பவருக்கு சொந்தமானது என கூறப்படும், கெக்கிராவை - கனேவல்பொல பகுதியிலுள்ள நெல் ஆலை நேற்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, ஆணி அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் நெல் ஆலையின் காவலாளியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்