இன்று முதல் வழமைக்கு திரும்பிய பொதுப் போக்குவரத்து

இன்று முதல் வழமைக்குத் திரும்பிய பொதுப் போக்குவரத்து

by Staff Writer 24-04-2019 | 9:22 AM
Colombo (News 1st) இன்று (24ஆம் திகதி) அதிகாலை முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம், இன்று அதிகாலை 4 மணி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கொழும்பு பெஸ்ட்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பிரதான பஸ் நிலையத்தில் இருந்து வழமை போன்று பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பயணிகள் வருகை குறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால், தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 6600 இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் மாத்திரம் 1,000 சிப்பாய்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனிடையே , நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் விசாரணைகளின் பொருட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளளர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அளுத்கம, பேருவளை, தர்கா நகர், கட்டான, கட்டுவாப்பிட்டிய மற்றும் வரக்காபொல ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.