விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு: சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் பாதுகாப்பாக வெடிக்க வைப்பு

விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு: சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் பாதுகாப்பாக வெடிக்க வைப்பு

விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு: சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் பாதுகாப்பாக வெடிக்க வைப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 9:10 pm

Colombo (News 1st) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாடெங்கிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இதுவரை சந்தேகத்திற்கிடமான பல இடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்றைய தினத்தில் மாத்திரம் 5 இடங்களில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகளை சோதனையிட்ட பாதுகாப்பு தரப்பினர் அவற்றை பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.

கட்டான – திம்பிரிகஸ்கொட்டுவ சிற்றுண்டிச்சாலையில் இருந்து சந்தேகத்திற்கிடமான பை ஒன்றை சோதனையிட்ட பாதுகாப்பு தரப்பினர் அதனை பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் இருந்து எந்தவொரு வெடிபொருளும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 1.30 அளவில் புறக்கோட்டை – ஐந்துலாம்பு சந்தியை அண்மித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு மோட்டார் சைக்கிளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பாக வெடிக்க வைத்தனர்.

அந்த மோட்டார் சைக்கிளிலும் எந்தவொரு வெடிபொருளும் சிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெல்லம்பிட்டி – நாகாஹமுல்ல வீதியில் தூண் ஒன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவால் இன்று பிற்பகல் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டது.

அந்தப் பொதியிலும் எந்தவொரு வெடிபொருளும் இருக்கவில்லை என பொலிஸார் கூறினர்.

அதே வீதியின் உட்புற வீதியில் வடிகாணில் இருந்து மற்றுமோர் சந்ததேகத்திற்கிடமான பொதியை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு சோதனையிட்டது.

இன்று மேலுமொரு சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் பொலிஸ் தலைமையகத்தை அண்மித்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்படையினரால் சோதனையிடப்பட்டது.

களுபோவில வைத்தியசாலையின் முன்பாக இன்று பகல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிளை விமானப்படை அதிகாரிகள் சோதனையிட்டதுடன், அதில் எவ்வித வெடிபொருளும் இருக்கவில்லை.

வரக்காப்பொல – அங்குருவெல்ல பகுதியில் நேற்றிரவு வீடொன்றை சோதனையிட்ட போது வேனொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் தொடர்பாடல் உபகரணங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்து இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ள வேனும், மோட்டார்சைக்கிளும் இதற்கு முன்னர் பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனங்களில் இரண்டென தற்போதைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலுமொரு சந்தேகநபரை ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவில் கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கினிகத்தேனை – அம்பகமுவ பிரதேச சபை முன்பாக சந்தேகத்திற்கிடமான விதத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை சோதனையிட்டனர்.

அதிலிருந்து தொடர்பாடல் சாதனங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த லொறி குறித்த இடத்தில் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், இதுவரை உரிமையாளர் முன்வரவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் முன்பாக சந்தேகத்திற்கிடமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் இன்று பகல் சோதனையிட்டனர்.

அதன் பின்னர் மோட்டார்சைக்கிளின் உரிமையாளர் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதுடன் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை – ஹூனுப்பிட்டி ரயில் நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள அதிவேக வீதியில் பாலத்தின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை பொலிஸார் இன்று பிற்பகல் சோதனையிட்டனர்.

இதன்போது ரயில் போக்குவரத்து மற்றும் அதிவேக வீதியின் போக்குவரத்தை சிறிது நேரத்திற்கு நிறுத்திவைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான எதுவும் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை குருநாகல் நகரில் பல இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ். ரயில் நிலையம் மற்றும் ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வவுனியா வைத்தியசாலை வளாகத்திலும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன.

லிந்துலை – ராணிவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பகுதியை சேர்ந்த சித்தி நசீரா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பல இடங்களுக்கு பயணித்த பஸ் டிக்கெட்களும், புகையிரத டிக்கெட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியில் இன்று பிற்பகல் சந்தேகத்திற்கிடமான வாகனமும் வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள், இரண்டு துப்பாக்கி ரவைகள், தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் வீதி வரைபடம் என்பன இந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதன்போது 27 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்