தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் சிலரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் சிலரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன

எழுத்தாளர் Staff Writer

24 Apr, 2019 | 8:39 pm

Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் சிலரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.

​கம்பளை – வெலிகந்த, உடகல்பாய பகுதியை சேர்ந்த 68 வயதான சவரியப்பா கிரேஸ் மற்றும் அவரின் பேரப்பிள்ளையான 16 வயதான T.மோசஸ் பிரசாந்தின் உயிரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவுகொள்ளப்பட்டது.

கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்திலிருந்து தமது வீட்டிற்கு வருகை தந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு, பாட்டியும் பேரனும் கடந்த சனிக்கிழமை கொழும்பிற்கு வந்துள்ளனர்.

சுவிட்ஸர்லாந்திலிருந்து வருகை தந்த மேலும் இருவரையும் அழைத்துக்கொண்டு மொத்தம் ஐவர் சின்னமன் கிரான்ட் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐவரும் உயிரிழந்ததுடன், பாட்டி மற்றும் பேரப்பிள்ளையின் பூதவுடல்கள் உடகல்பாய பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இருவரின் இறுதிக்கிரியைகளும் கம்பளை பொது மயானத்தில் இன்று இடம்பெற்றன.

இதேவேளை, ஹட்டன் – வெலிஓயாவை பிறப்பிடமாகக் கொண்ட சுப்பையா சத்தியவாணி என்பவரும் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனைக்கு சென்றிருந்த பொழுது அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் சிக்கிக் கொண்டார்.

கடந்த பல வருடங்களாக இரத்மலானையில் தொழில் செய்து வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானார்.

இந்நிலையில், இன்று வெலிஓயா கீழ்பிரிவில் உள்ள வீட்டில் சுப்பையா சத்தியவாணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொச்சிக்கடை குண்டுத்தாக்குதலில் பண்டாரவளை அம்பேதென்னவை சேர்ந்த எம்.மரியதாஸூம் தனது உயிரை கனப்பொழுதில் இழந்தார்.

66 வயதுடைய இவர் மகளின் வீட்டிற்கு செல்லும் வழியில், ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடச் சென்றுள்ளார். இறுதியில் மகளின் வீட்டிற்கு செல்ல அவருக்கு வாயப்புக் கிடைக்கவில்லை.

இன்று அவரின் இறுதிக்கிரியைகள் பண்டாரவளை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றதுடன், பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் தன் இரு மகள்களையும் ஒரு மகனையும் விட்டு பிரியாவிடை பெற்றார்.

இதேவேளை, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் யாழ். பருத்தித்துறை – கோரியடியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த 38 வயதான சவரிமுத்து அமலசூரியனின் பூதவுடல் நேற்று (23) நல்லடக்கம் செய்யப்பட்டது.

பருத்தித்துறை புனித தோமையார் தேவாலயத்தில் இடம்பெற்ற இறுதி ஆராதனைகளின் பின்னர், அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்