பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பதாக வௌிநாட்டுத் தூதுவர்கள் உறுதி

by Staff Writer 23-04-2019 | 6:43 PM
Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை ஜனாதிபதிக்கு வழங்குவதாக வௌிநாட்டு தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர். தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்த போது, இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. எனினும், தாக்குதல் இடம்பெற்ற உடனேயே அதனுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். நேற்று (22) நள்ளிரவு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இராணுவத்தினருக்கு பயங்கரவாத ஒழிப்பிற்கான அதிகாரத்தை நேரடியாக வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்த அனுபவத்துடன் சர்வதேசத்தின் உதவியை பயன்படுத்தி பயங்கரவாதத்தை விரைவில் இல்லாதொழிக்க முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டுள்ளார். விசாரணைகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பின் போது, தொழிநுட்ப வசதிகளை கொண்ட 8 நாடுகள் தங்களின் உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் வௌிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த போது ஜனாதிபதி கூறியுள்ளார். அவசரகால நிலையை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தாதிருப்பதை தாம் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதேவேளை, தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சென்றிருந்தார். தேவாலயத்தை கண்காணித்த ஜனாதிபதி தம்முடைய அனுதாபத்தையும் கண்டனத்தையும் வௌியிட்டுள்ளார். தேவாலயத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, நிர்மாண நடவடிக்கைகளை விரைவில் பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மிலேச்சத்தனமான இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தினத்தில் வழிபாட்டிற்காக ஒன்றுகூடிய மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகளிலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.