நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல்

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸார் தேடுதல்; வைத்தியசாலைகளிலும் சோதனை

by Staff Writer 23-04-2019 | 9:13 PM
Colombo (News 1st) நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வவுனியா பொது வைத்தியசாலையில் பொலிஸார் இன்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், நோயாளர்களைப் பார்வையிட வருபவர்களின் உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் இன்று பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வைத்தியசாலைக்கு முன்பாக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் காரின் உரிமையாளர் காரை அப்புறப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை பஸ் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து, பஸ் நிலையத்திற்கு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. எனினும், குறித்த பொதியில் வெடிக்கும் பொருட்கள் எவையும் இருக்கவில்லை. ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று தியத்தலாவை முப்படையினர் மற்றும் ஹப்புத்தளை பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுத்துவக்கு ஒன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ரவை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மோப்ப நாய் மூலம் மேற்கொண்ட தேடுதலின் பிரகாரம், வீடொன்றில் இருந்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் ஒருவரும் அவரது உறவு முறை இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பெண் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.