தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரிகளின் CCTV காட்சிகள் கிடைத்துள்ளன

by Bella Dalima 23-04-2019 | 9:54 PM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன தாக்குதல்களுக்கு இலக்கான இடங்களில் கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலும் ஒன்று. ஹோட்டலின் 6 ஆவது மாடியில் இருந்து குண்டை எடுத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர், மூன்றாம் மாடியிலுள்ள உணவகத்திற்கு சென்று, குண்டை வெடிக்க வைப்பது வரையிலான CCTV காட்சிகள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. ஷங்ரில்லா ஹோட்டலில் இரண்டு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தொடர் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டதாகக் கருதப்படும், சஹரான் ஹஷீம் எனப்படும் மொஹமட் காசிம் மொஹமட் சஹரானும் CCTV காணொளியில் உள்ளார். நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரியின் அடையாளம் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. எனினும், குண்டுடன் தேவாலயத்திற்கு வருகைதரும் காட்சி மற்றும் அங்கிருந்த சந்தேகத்திற்கிடமான நபர் தொடர்பான காட்சிகளும் கிடைத்துள்ளன. 14 சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேருக்கும் அதிகமானோரின் உயிர்களைக் காவுகொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொள்ள, தற்கொலை குண்டுதாரி மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு வருகை தந்த காட்சியும் கிடைக்கப்பெற்றுள்ளது. தெமட்டகொட சொகுசு வீட்டுத் தொகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் தந்தை அண்மையில் கைது செய்யப்பட்டார். அவர் 65 வயதான அல்ஹாஜ் யூசுப் மொஹமட் இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சினமன்ட் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை, இவரது மகன்மாரே நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.