நாடெங்கிலும் துக்கதினம் அனுஷ்டிப்பு

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக நாடெங்கிலும் துக்கதினம் அனுஷ்டிப்பு

by Staff Writer 23-04-2019 | 7:29 PM
Colombo (News 1st) கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நாட்டின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இன்று தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன், யாழ். மரியன்னை தேவாலயத்திலும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா கருமாரியம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றன. தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மட்டக்களப்பிலுள்ள ஆலயங்களில் இன்று ஆத்மசாந்தி பூஜைகள் இடம்பெற்றன. அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதேவேளை, உயிரிழந்தவர்களுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், கிண்ணியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. காரைத்தீவு பிரதேச சபையிலும் இன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மலையகத்தின் பல பகுதிகளிலும் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. புத்தளம் நகரிலுள்ள கடைகள் இன்று மூடப்பட்டிருந்த நிலையில், வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.