குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன

by Staff Writer 23-04-2019 | 8:00 PM
Colombo (News 1st) குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் சில இன்று இடம்பெற்றன. கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த, தனியார் வைத்தியசாலையில் தாதியாகக் கடமையாற்றிய 52 வயதான மேரி மக்ரக் ரவி மற்றும் சாதாரண தரத்தில் கல்வி பயின்ற 16 வயதான அவரது மகனான நிரோசன் ரவி ஆகியோரின் சடலங்கள் உறவினர்களிடம் நேற்று (22) கையளிக்கப்பட்டது. மட்டக்குளிய பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் பூவுடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்றன. பூதவுடல்கள் மாதம்பிட்டிய பொது மயானத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த 26 வயதான பி.ஏ.ஹர்சனி ஶ்ரீமாலியின் பூதவுடல் நேற்று (22) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. பி.ஏ.ஹர்சனி ஶ்ரீமாலி ஒரு பிள்ளையின் தயாராவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24) நடைபெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த மூவரது சடலங்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன. மட்டக்களப்பு மாமாங்கத்தை சேர்ந்த 13 வயதான ஜெஷானிக்கா திவேநிதனின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்று, பூதவுடல் கல்வியங்காடு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியில் தரம் 7-இல் கல்வி பயின்று வந்த மாணவியே குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். இதேவேளை, மாமாங்கத்தை சேர்ந்த 13 வயதான ஜோன் ஜெசீரன் ஜெயரெட்ணத்தின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றன. இவர் மட்டக்களப்பு மெத்தடிஸ்ட் கல்லூரியில் தரம் 7 -இல் கல்வி பயின்று வந்தார். மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி பகுதியை சேர்ந்த10 வயதான மகேந்திரன் ஜெபிஷாந்தின் பூதவுடல் கல்வியங்காடு பொது மயானத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. மட்டக்களப்பு மெத்தடிஸ்ட் கல்லூரியில் தரம் 5 இல் இவர் கல்வி பயின்று வந்துள்ளார்.