கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

by Staff Writer 23-04-2019 | 1:45 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று காலை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜனாதிபதி, குறித்த தேவாலயத்தின் போதகரான ஶ்ரீலால் பொன்சேகாவை சந்தித்து அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பிலும் துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேவாலயத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, நிர்மாண நடவடிக்கைகளை விரைவில் பூர்த்திசெய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இராணுவத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மிலேச்சத்தனமான இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்த ஜனாதிபதி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தினத்தில் வழிபாட்டுக்காக ஒன்றுகூடிய மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளிலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.