இந்திய தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று

இந்திய மக்களவைத் தேர்தல்: மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று

by Staff Writer 23-04-2019 | 8:00 AM
Colombo (News 1st) இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (23ஆம் திகதி) நடத்தப்படுகின்றது. 7 கட்டங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் ​தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலுள்ள 116 தொகுதிகளில் நடத்தப்படுகின்றது. கடந்த 11ஆம் திகதி முதல்கட்டமாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் கடந்த 18ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாவது கட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த 116 தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றார். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதேவேளை, குஜராத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகின்றது.