இலங்கை விவகாரத்தில் இன்டர்போல் தலையிடும் சாத்தியம்

இலங்கை விவகாரத்தில் இன்டர்போல் தலையிடும் சாத்தியம்

by Staff Writer 22-04-2019 | 9:48 PM
Colombo (News 1st) இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்டர்போல் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. தாக்குதலுடனான சர்வதேச தொடர்புகள் குறித்து கண்டறிவதற்காக, தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அமைப்பு தொடர்பான ஆவணங்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளின் கோரிக்கைக்கு இணங்க குற்றச்செயல் பரிசீலனை, வெடிப்புச் சம்பவங்கள், பயங்கரவாத ஒழிப்பு ஆகிய பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சர்வதேச பொலிஸ்குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் குறிப்பிட்டுள்ளது. தேவையேற்படின் டிஜிட்டல் இரசாயன பகுப்பாய்வு, உயிரியல் மற்றும் புகைப்படங்கள், காணொளி ஆய்வாளர்களையும் அனுப்பிவைக்க தயாராகவுள்ளதாக சர்வதேச பொலிஸ் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான எவ்வகையான விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேச பொலிஸின் செயலாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டோக் தெரிவித்துள்ளார். தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தொடர்பான தகவல்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் கிடைக்கும் தகவல்களை சர்வதேச பொலிஸாரின் சர்வதேச வலையமைப்பினூடாக உறுதிப்படுத்த முடியும். உலகில் இடம்பெறும் எந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கும் பொறுப்பு சர்வதேச சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு உள்ளதென சர்வதேச பொலிஸின் செயலாளர் தெரிவித்துள்ளார்.