UPDATE: சந்தேகத்தின் பேரில் 07 பேர் கைது - இறந்தவர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரிப்பு

by Fazlullah Mubarak 21-04-2019 | 6:02 PM
LIVE : தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 07 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தெமட்டகொட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இதில் அடங்குகின்றனர். இன்று (21ஆம் திகதி) காலை கொழும்பின் பல பகுதிகளிலும் கொழும்பின் பிற பகுதிகளிலும்  கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரிடம் விசாரணைக்கு சென்றபோதே தெமட்டகொடையில் வெடிச் சம்பவம் இடம்பெற்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசாரணைகளுக்காக சென்ற பொலிஸ் அதிகாரிகள் மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், ஒவ்வொரு தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை தனித்தனியே தற்போதளவில் குறிப்பிட முடியாதுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்தத் தாக்குதல்கள் ஒன்றுடனொன்று தொடர்புள்ளதா என்பதை விசாரணைகளின் இறுதியில் கண்டுகொள்ள இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், குறித்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் 215 ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. இதன்போது, பிரபல சமையல் கலை நிபுணர் ஷாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மூத்த மகளும் உயிரிழந்துள்ள நிலையில், 27 வௌிநாட்வர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களில் 104 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், 7 சடலங்கள் ராகம வைத்தியசாலையிலும் 66க்கும் கிட்டிய சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 28 சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் 2 சடலங்கள் களுபோவில வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்  உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, 260 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான  தகவல்கள் ஏதும் தம் வசமிருப்பின் 011 2323015 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு துரித தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் நாளைய அளவில் பெரும்பாலும் தகவல்களை வழங்க எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் மறு அறிவித்தல் வரை சகல அரச பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதுடன், கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரை 08 குண்டுத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதுடன் அவற்றில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்களை இலக்கு வைத்தும் மேலும் 3 தாக்குதல்கள் பிரபல ஹோட்டல்களை இலக்கு வைத்தும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், பண்டாரநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களின் பாதுகாப்பு, விமானப்படையின் வசம் வழங்கப்பட்டுள்ளது என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இறந்தவர்களின் உடல்களை ஊடகங்கள் மூலம் வௌிப்படையாக காண்பிப்பதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் யூடியூப் மாத்திரம் செயற்பாட்டில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.