அருவக்காட்டிற்கு குப்பை கொண்டுசெல்லப்படவில்லை

புத்தளத்திலிருந்து குப்பை அருவக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படவில்லை

by Staff Writer 21-04-2019 | 8:52 AM
Colombo(News 1st) அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையம் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளது. எனினும், புத்தளம் மாவட்டத்திலுள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றங்களிலிருந்தும் இதுவரையில் குப்பைகளை சேகரித்து அருவக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படவில்லை என, மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாரியளவில் நிதியை செலவிட்டு நிர்மானிக்கப்பட்டுள்ள அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையத்தை பயன்படுத்தாமல் இருப்பது, புத்தளம் மாவட்டத்தில் காணப்படக்கூடிய கழிவகற்றல் சிக்கலை மேலும் அதிகரிக்கும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார். அருவக்காடு கழிவகற்றல் மத்திய நிலையம் தொடர்பில் மக்களிடையே காணப்படும் தறவான புரிதலே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அருவக்காட்டில் தற்போது அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டடத்தில் நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் கழிவுகளை சேகரிக்க முடியும் என, மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அடுத்த வாரம் கலந்துரையாடப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்கு புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.