பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

by Staff Writer 21-04-2019 | 2:58 PM
Colombo (News 1st) இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்கும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான தேடுதல்களை மேற்கொள்வதற்குமாக தேசிய நடவடிக்கை கருமபீடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பாதுகாப்பு தரப்பு மற்றும் ஏனைய துறைகளின் பிரதானிகளுடன் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது. பொலிஸார் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா ஹோட்டல்கள் வைத்தியசாலைகள், தூதரகங்கள் கத்தொலிக்க மதத்தலைவர்கள் வசிக்கும் வாசஸ்தலஙகள் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்கள் பரப்படுவதைத் தவிர்க்கும் வகையில் விசாரணைகள் நிறைவடையும் வரை அனைத்து சமூக வலைத்தளங்களை தற்காலிகமாக முடக்குதவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஜனாதிபதி செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் நாளை மறுதினமும் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காக முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பினூடாக மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.