மோசடிக்காரர்களின் கையில் ஊழியர் சேமலாப நிதி

மோசடிக்காரர்களின் கையில் சிக்கிய ஊழியர் சேமலாப நிதியம்

by Staff Writer 20-04-2019 | 7:47 PM
Colombo (News 1st) நாட்டில் தொழில்புரியும் மக்களின் நிதி ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் அரசியல் மோசடிக்காரர்களிடம் சிக்கிய பல சந்தர்ப்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முறிகள் மோசடியூடாக இடம்பெற்ற ஊழியர் சேமலாப நிதிக்கொள்ளை போன்று இதற்கு முன்னரும், பின்னரும் இடம்பெற்ற பல மோசடிகளை நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து வௌிக்கொணர்ந்து வருகிறது. நாட்டில் தனியார் மற்றும் பகுதியளவு அரச நிறுவனங்களில் சேவை புரிபவர்களின் நிதிகளின் மூலமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் 2017 டிசம்பர் 31 ஆம் திகதியில் செயற்பாட்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2.63 மில்லியனாகும். அன்றைய தினம் நிதியத்திலிருந்த தேறிய பெறுமதி 20 இலட்சத்து 66 ஆயிரத்து 299 மில்லியனாகும். இந்த நிதியத்திற்கு கடந்த சில வருடங்களுக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்கள் விடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் தொடர்பில் பேசப்பட்டது. இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு நேரடியாக திறைசேரியில் முறிகள் விநியோகம் செய்வதை இடைநிறுத்துவற்கு 2015 பெப்ரவரி 27 ஆம் திகதி முடிவெடுக்கப்பட்டதுடன், அன்றிலிருந்து இரண்டாம் நிலை சந்தை கொடுக்கல் வாங்கல்களில் இருந்து விலகி, 2016 மே மாதம் வரையிலான காலப்பகுதி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அறிக்கையிடப்பட்ட விசேட கணக்காய்வறிக்கை தற்பொழுது வௌியிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 வரையிலான காலப்பகுதியில் ஊழியர் சேமலாப நிதியம், ஆரம்ப சந்தையில் திறைசேரி முறிகளை விலைக்கு கொள்வனவு செய்வது 95 வீதத்திலிருந்து 66 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அதனை முன்னிட்டு, இரண்டாம் நிலை சந்தையில் திறைசேரி முறிகளை கொள்வனவு செய்வது 5 வீதத்திலிருந்து 34 வீதம் வரை உயர்வடைந்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட ஏலத்தினை இலங்கை மத்திய வங்கி ஏற்பது தொடர்ந்தும் குறைவடைந்தமையானது அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள மற்றுமொரு காரணியாகும். 2013 ஆம் ஆண்டின் 99 சதவீதமாக இருந்த நிதியத்தின் ஏலத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை, 2016 ஆம் ஆண்டாகும் பொழுது 57 சதவீதமாகக் குறைவடைந்துள்ளமை கேள்விக்குரிய விடயமாகும். மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசியல் அதிகாரமிக்கவர்கள் தங்களுடைய நட்புக்களுக்காக ஊழியர் சேமலாப நிதியத்தினை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு ஒரு சோகமான செய்தியாகும்.