எதிர்வரும் சில தினங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்

by Staff Writer 20-04-2019 | 4:00 PM
Colombo (News 1st) மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய , மேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 100 மில்லிமீட்டர் வரையான இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மன்னார், வவுனியா மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய பலத்த மழை வீழ்ச்சி எதிர்வரும் சில தினங்களுக்கு பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இடி மின்னலுடன் கூடிய மழையின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் திறந்தவௌியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், கட்டடம் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த காற்று காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதன் காரணமாக வீடுகளை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பற்ற வகையில் இருக்கக்கூடிய மரக்கிளைகளை வெட்டி அகற்றுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது. இதேவேளை, கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 300 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாட்டின் ஏனைய சில பகுதிகளில் வறட்சியுடனான வானிலை நிலவுகின்றது. யாழ்ப்பாணம், அம்பாறை, புத்தளம்,கேகாலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் வறட்சி நிலவுகின்றது. வறட்சி காரணமாக சுமார் 1,50,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.