ஆசிய பளுதூக்கல்: இலங்கைக்கு முதல் பதக்கம்

ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப்: இலங்கைக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார் டிலந்த இசுரு

by Staff Writer 20-04-2019 | 6:51 PM
Colombo (News 1st) சீனாவில் நடைபெறும் ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை டிலந்த இசுரு குமார வென்று கொடுத்துள்ளார். ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். Snatch முறையில் 105 கிலோகிராமை தூக்கிய டிலந்த இசுரு, Clean and Jerk முறையில் 135 கிலோகிராமை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார். சீனாவின் நின்போவில் நடைபெறும் இந்த பளுதூக்கல் போட்டிகளில் இலங்கை சார்பாக 4 வீரர்களும், 2 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். சிந்தன கீதால் விதானக 81 கிலோகிராம் எடைப் பிரிவிலும், இந்திக்க திசாநாயக்க 73 கிலோகிராம் எடைப்பிரிவிலும், திலங்க பலகசிங்க 61 கிலோகிராம் எடைப்பிரிவிலும் போட்டியிடுகின்றனர். ஹங்சனி கோமஸ் 49 கிலோகிராம் எடைப்பிரிவிலும், சமரி வர்ணகுலசூரிய 55 கிலோகிராம் எடைப்பிரிவிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த ஆசிய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டிகளானது 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவிற்கான தகுதிகாண் போட்டிகளாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.