by Staff Writer 20-04-2019 | 4:37 PM
Colombo (News 1st) அனைத்து நபர்களையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்வதற்கான புதிய திட்டமொன்றை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
60 வைத்தியசாலைகளில் இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
குறித்த வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாகவும் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
எனினும், வழமை போல நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மருத்துவ சேவைகளை எவ்வித இடையூறுமின்றி அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.