புலானி சமூகத்தினர் படுகொலை: மாலி பிரதமர் இராஜினாமா

புலானி சமூகத்தினர் 160 பேர் படுகொலை: மாலி பிரதமரும் அமைச்சர்களும் இராஜினாமா

by Bella Dalima 19-04-2019 | 5:12 PM
மாலியில் கடந்த மாதம் புலானி இனத்தைச் சேர்ந்த 160 பேர் கொன்று குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்ததால், பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் புலானி என்ற விவசாய சமூகத்தினருக்கும், தோகோன் பழங்குடியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 500 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், கடந்த மாதம் 23 ஆம் திகதி மோப்டி நகரம் அருகேயுள்ள ஒகோசாகோ கிராமத்தில் நுழைந்த ஆயுதக் குழுவினர், துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் புலானி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 160 பேரை படுகொலை செய்தனர். இந்த படுகொலையை தோகோன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் நிகழ்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் கண்டித்து மாலியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த பிரதமர் Soumeylou Boubèye Maïga தவறியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. மாலி ஜனாதிபதியும் தனது தொலைக்காட்சி உரையில், பிரதமர் பெயரை குறிப்பிடாமல் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்தனர். இவ்வாறு அனைத்து தரப்பில் இருந்தும் பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், பிரதமர் Soumeylou Boubèye Maïga தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது அமைச்சரவையும் இராஜினாமா செய்துள்ளது. அமைச்சர்களுடன் சென்று தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார்.