கொலன்னாவை நகர சபைக் கட்டடத்தில் போதைப்பொருள் வர்த்தகம்; முக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம்

by Staff Writer 19-04-2019 | 8:43 PM
Colombo (News 1st) கொலன்னாவை நகர சபைக் கட்டடத்தில் போதைப்பொருள் வர்த்தகம்; முக்கிய சந்தேகநபர் தப்பியோட்டம் கொலன்னாவை நகரசபை கட்டடத்திலுள்ள அறை ஒன்றில் போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்றமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது தப்பிச்சென்ற பிரதான சந்தேகநபரைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகரசபை கட்டடத்தின் விடுதியில் சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன், கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பின் போது குறித்த அறையில் தங்கியிருந்த நிகால் குணசேகர என்பவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த அறையில் மேற்கொள்ளப்பட்ட தேடுல் நடவடிக்கையின் போது 3 கிலோகிராமிற்கும் மேற்பட்ட கஞ்சாவும் 39 கிராம் ஐஸ் போதைப்பொருளும் இலத்திரனியல் தராசும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, 77,620 ரூபா பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நகரசபை கட்டடத்தில் குறித்த அறை போதைப்பொருள் வர்த்தக நிலையமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. 23 வயதுடைய இருவரும், 19 வயதுடைய ஒருவரும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த 14 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கொலன்னாவை நகர சபையின் தலைவர் குத்தில சில்வாவிடம் வினவியபோது, நகர சபை ஊழியர் என கூறப்படுகின்றவர் சில மாதங்களுக்கு முன் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். எனினும், சுற்றிவளைப்பு இடம்பெற்ற போது அவரிடம் நகரசபை அடையாள அட்டை காணப்பட்டதுடன், அதனைக் காண்பித்து நகர சபை ஊழியர் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் இடம்பெற்றபோது, பணியிலிருந்த காவலாளிகள் இருவர் மற்றும் நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோரின் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கொலன்னாவை நகர சபையினை மையப்படுத்தி போதைப்பொருள் வர்த்தகம் இடம்பெற்று வந்ததை ஆளும், எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் அறிந்திருந்தமை அவர்களின் கருத்துக்கள் மூலம் உறுதியாகின்றது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.