மக்களவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

இந்திய மக்களவைத் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று

by Staff Writer 18-04-2019 | 8:48 AM
Colombo (News 1st) இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களிலும் புதுச்சேரியிலும் இன்று (18ஆம் திகதி) நடைபெறுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், தமிழகத்திலுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்றைய தினம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கவுள்ள நிலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மாத்திரம் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இதனிடையே, வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய குற்றச்சாட்டு எழுந்ததால், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் குடியரசுத் தலைவரினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் இன்றைய இரண்டாம் கட்ட வாக்களிப்பு 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேஷ், அஸாம், ஒடிசா, பீகார், சத்திஸ்கர், மேற்கு வங்கம், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலுள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. இன்றைய இரண்டாம் கட்டத்தேர்தலில் 97 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வேலூரில் தேர்தல் இரத்து செய்யப்பட்டு, மேற்கு திரிபுரா தொகுதிக்கான வாக்குப்பதிவு 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதால் 95 தொகுதிகளிலேயே இன்று தேர்தல் நடைபெறுகின்றது. இதனிடையே, வேலூரில் தேர்தலை நடாத்த வேண்டும் எனக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பு கடந்த 11 ஆம் திகதி, 91 ​தொகுதிகளில் நடைபெற்றிருந்தது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாக்கெண்ணும் பணிகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.