எயார்வேஸின் அனைத்து விமானசேவைகளும் இடைநிறுத்தம்

இந்தியாவின் எயார்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமானசேவைகளும் இடைநிறுத்தம்

by Chandrasekaram Chandravadani 18-04-2019 | 6:51 AM
Colombo (News 1st) இந்தியாவின் ஜெட் எயார்வேஸ் (Jet Airways), தமது சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முழுவதையும் நேற்றுடன் (17ஆம் திகதி) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியின் பின்னர் விமான சேவைகளைத் தொடர்ந்து நடாத்துவதற்காக கேட்டிருந்த அவசரகாலக் கடனுதவி கிடைக்காத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமது கடைசியான விமானம் நேற்று சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக, ஜெட் எயார்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தமக்கு இதைத்தவிர வேறு வழியில்லை எனக் குறிப்பிட்ட குறித்த விமான நிறுவனம், தமது விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் சிக்கியுள்ள ஜெட் எயார்வேஸ் நிறுவனம், தமது அனைத்து விமான சேவைகளையும் நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான, ஜெட் எயார்வேஸ் நிறுவனத்திடம் 123 விமானங்கள் உள்ள போதிலும், தற்போது 5 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டிலுள்ளதாக, தகவல்கள் வௌியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.