ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என அறிவிப்பு

ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என அறிவிப்பு

by Staff Writer 17-04-2019 | 10:10 PM
Colombo (News 1st) ரயில் மார்க்கங்கள் பலவற்றில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் மார்க்கங்களில் மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் வீழ்ந்துள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. இதனிடையே சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம், பொலன்னறுவை மற்றும் மன்னார் மாவட்டங்களில் 50 மில்லிமீட்டர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடி மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, கடும் மழை காரணமாக ஹட்டன் நகரின் சில பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து 2 மணித்தியாலங்களுக்கு தடைப்பட்டது. இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் பனி மூட்டம் நிலவுகிறது. காசல் ரீ, மவுஸ்ஸாகலை மற்றும் மேல் கொத்மலை போன்ற நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.