மஹியங்கனை விபத்தில் 10 பேர் பலி: கைதான வாகன சாரதி பிணையில் விடுவிப்பு

by Staff Writer 17-04-2019 | 5:31 PM
Colombo (News 1st) மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சந்தேகநபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் அனைவரும் இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மட்டக்களப்பை சேர்ந்தவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த 13 மற்றும் 16 வயதான சிறுமிகள் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், மஹியங்கனையிலிருந்து பயணித்த வேன் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது. மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கடந்த 13 ஆம் திகதி முதல் இன்று வரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.