பெருவின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  

by Bella Dalima 17-04-2019 | 9:14 PM
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா (Alan García) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் அவரை கைது செய்ய சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அவர் பெரு தலைநகர் லிமாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். கர்சியாவின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்துள்ளமையினால், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. எனினும், அவர் உயிரிழந்துள்ளார். பிரேசிலின் கட்டுமான நிறுவனமான Odebrecht நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றதாக அலன் கர்சியா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனினும், அவர் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து நிராகரித்து வந்தார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். அலன் கர்சியா, 1985 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையிலும் 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலும் பெருவின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். அவரது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் தலைநகரில் இடம்பெற்ற மெட்ரோ லைன் கட்டுமானத் திட்டத்தின் போது, Odebrecht நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அரசியல் பழிவாங்கலுக்கு தாம் முகங்கொடுத்துள்ளதாகவும் தமக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் எவையும் இல்லை எனவும் கர்சியா கடந்த செவ்வாய்க்கிழமை (16) தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.