கொழும்பு மாநகர ஆணையாளர் தொடர்பில் நடவடிக்கை

கொழும்பு மாநகர ஆணையாளர் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அசாத் சாலி தெரிவிப்பு

by Staff Writer 17-04-2019 | 8:36 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர ஆணையாளர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எதிர்பார்த்திருப்பதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். மீதொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து வீழ்ந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு ஏற்ப, கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே. அனுர கடந்த வருடம் மார்ச் 2 ஆம் திகதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், முன்னாள் ஆணையாளர் ஹேமகுமார நாணயக்கார மீண்டும் அவரை அந்த பதவியில் நியமித்தார். கொழும்பு மாநகர சபையினால் மீதொட்டமுல்லை கழிவகற்றும் திட்டம் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என ஓய்வு பெற்ற ​மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான கலாநிதி சந்திரதாச நாணயக்கார தயாரித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய முறையில் கழிவு முகாமைத்துவம் மேற்கொள்ளப்படாமையினால் மாநகர சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்புக்கூற ​வேண்டுமென கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தயாரித்த விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையை பயன்படுத்தாமையினால் அரசாங்கத்தினால் செலவு செய்ய வேண்டியேற்பட்டுள்ள மேலதிக செலவுகள் தொடர்பில் குறித்த அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.