தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு

இந்திய மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு; வேலூர் தொகுதி தேர்தல் இரத்து

by Bella Dalima 17-04-2019 | 6:07 PM
Colombo (News 1st) பரபரப்பான அரசியல் சூழலில் இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (18) நடைபெறவுள்ளது. பணப்பட்டுவாடா நடைபெறலாம் என்ற சந்தேகத்தால் வேலூர் தொகுதி தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஏனைய தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, அசாம், பீகார், சட்டிஸ்கர், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மணிப்பூர், ஒடிஷா, திரிபுரா, உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிக அளவில் பணம் கைப்பற்றதை அடுத்து, தேர்தல் ஆணையம் அத்தொகுதியில் தேர்தலை இரத்து செய்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவரது வீட்டில் கடந்த மாதம் 29, 30 ஆம் திகதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும் 10 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது. கடந்த முதலாம், இரண்டாம் திகதிகளில் துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினர் ஒருவரின் வீடு மற்றும் சீமந்து களஞ்சியத்தில் இருந்து 11 கோடியே 48 இலட்சம் ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாகக் கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, வேலூர் தொகுதி தேர்தலை இந்திய தேர்தல்கள் ஆணையம் இரத்து செய்துள்ளது. இதேவேளை, கனிமொழியின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த சோதனையில் பணம் அல்லது வேறு பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. இந்த நிலையில், பிரதமர் மோடியின் திட்டமிட்ட செயற்பாடே இது எனவும் பா.ஜ.க மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் வீட்டில் சோதனை நடத்தினால் கோடிக்கணக்கான பணம் கிடைக்கும் எனவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும், உரிய ஆதாரங்கள் இன்றி கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்க மாட்டாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆண்டிப்பட்டி அலுவலக வளாகத்தில் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அலுவலகத்தில் பணப்பட்டுவாடா இடம்பெற்றுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, குறித்த அலுவலகத்தை சோதனையிட தேர்தல் அதிகாரிகள் சென்றிருந்தனர். இதன்போது, அவர்களுக்கு அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்ததால் அவர்களை கலைக்கும் வகையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கடலூரில் 104 வயதான மூதாட்டி ஒருவரை வாக்களிக்க வருமாறு குறித்த பகுதி ஆட்சியர் மூதாட்டியின் காலில் வீழ்ந்து அழைத்தமை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 100 வீத வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மேற்கொண்டு வருகின்றார். இதேவேளை, சத்தீஸ்கரின் கோர்பா பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களை ஏமாற்றுவதில் அந்த கட்சி பட்டம் பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தேசவிரோத சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் தீவிரவாதம் பரவ காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். ஆயுதப்படை சட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்புப் படைகளின் கைகள் கட்டப்படும். காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் நிலைமை மோசமடையும்.
என மோடி தனது விமர்சனங்களை முன்வைத்தார். இம்முறை மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியிலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகின்றார். இன்று காலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு வயநாட்டை தாம் தெரிவு செய்தமைக்கான நோக்கத்தை ராகுல் காந்தி தெளிவுபடுத்தினார்.
அமேதியை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தாமல், தென்னிந்தியாவின் குரலையும் பிரதிநிதித்துவப்படுத்துவது அவசியம் என நான் கருதினேன். உங்களது குரல் நாட்டின் வேறு எந்தவொரு பகுதியையும் சேர்ந்தவர்களுக்கு தாழ்த்தப்பட்டது அல்ல. உங்களது மொழி வேறு மொழிகளை விட தாழ்த்தப்பட்டது அல்ல. தென்னிந்தியாவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்தபோது உங்களது வயநாடே அதற்கு மிகவும் பொருத்தமானது என நான் தீர்மானித்தேன். நான் இங்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. உங்கள் நண்பனாய், மகனாய், நலன் விரும்பியாய் வந்துள்ளேன். மோடியைப் போன்று நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதற்கு நான் தயாரில்லை.
என ராகுல் காந்தி குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய தேர்தலான இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 11 ஆம் திகதி 18 மாநிலங்களிலும் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றிருந்தது. நாளை 13 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறுகின்ற தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் திகதி வௌியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.