12 வருடங்களின் பின்னர் சொந்த நிலத்தில் குடியேறிய கரந்தாய் மக்கள்

by Staff Writer 16-04-2019 | 8:40 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - கரந்தாய் பகுதி மக்கள் 12 வருடங்களின் பின்னர் இன்று சொந்த நிலத்தில் மீள்குடியேறினர். கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் பிரதேச மக்கள் யுத்தம் காரணமாக 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த நிலத்திற்கு திரும்பியிருந்தனர். எனினும், இந்த மக்கள் குடியிருந்த நிலங்களை தமக்கு சொந்தமான நிலம் என தெரிவித்து தென்னை பயிர்செய்கை சபை மக்கள் மீளக்குடியேறுவதைத் தடுத்தனர். இந்த நிலையில், மக்கள் தமது காணிக்குள் செல்ல முடியாமல் உறவினர்களின் வீடுகளில் வசித்துவந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் இன்று தமது சொந்தக் காணிகளுக்கு சென்று குடியேறினர். இதன்போது பொலிஸாருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்த மக்களுக்கு 1976 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஶ்ரீதரன், பொலிஸார், மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், தென்னை பயிர்செய்கை சபையின் உயரதிகாரிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை , இந்த விடயம் தொடர்பிலான மற்றுமொரு கலந்துரையாடல் தெங்கு செய்கை சபையின் அதிகாரிகளுடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.